இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்களை இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதோடு, தங்கள் படகில் ஏறி தாக்கியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்திருந்தனர். இதுபோன்ற சூழலை இதற்கு முன் சந்தித்தது இல்லை என்றும், இந்திய கடலோர காவல் படையே இவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆதங்கப்பட்டனர். இந்நிலையில் கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் 75,000 மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவும் மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.