திருச்சியில் நட்சத்திர விடுதியில் பற்றி எரிந்த நெருப்பை 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
கோஹினூர் சிக்னல் அருகே தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் நேற்றிரவு, 4 ஆவது மாடியில் திடீரென தீப்பற்றியது. ஐந்தாவது மாடிக்கும் நெருப்பு பரவி, அங்கு புகைமூட்டம் சூழ்ந்தது. விடுதியில் உள்ள 40 அறைகளில் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். தகலறிந்து சென்ற மின்சார ஊழியர்கள், அங்கு மின் விநியோகத்தை துண்டித்தனர். தீயை அணைக்க 3 வாகனங்களில் சென்ற கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
தீ விபத்து நேரிட்ட பகுதி குறுகலான பாதையில் இருந்ததால், தீயை அணைக்கும் பணிகள் சவாலாக இருந்தது. தீயை அணைக்க போதுமான தண்ணீர் லாரிகளை மாநகராட்சி தரப்பில் அனுப்பாததும் சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் 5 மணி நேரத்துக்கும் மேல் போராடிய தீயணைப்புத்துறையினர், நெருப்பை அணைத்தனர்.
விபத்தில், விடுதியின் 3, 4 மற்றும் ஐந்தாவது மாடிகளின் சுவர்கள் முற்றிலும் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தில்லை நகர் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விசாரித்து வருகின்றனர். விபத்து நேரிட்ட விடுதியில் தீ தடுப்பு சாதனங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.