சென்னை அமைந்தகரையில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.
சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லா அவென்யூ திருவிக பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை கத்தியால் குத்தி முகம் முழுவதும் சிதைத்து விட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவம் கடந்த 18 ஆம் தேதி மதியம் பட்டப்பகலில் நடைபெற்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டவர் செனாய் நகரைச சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், குற்றவாளிகள் யார் என்று போலீசார் தேடிவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பழைய குற்றவாளிகள் சந்திரசேகர் மற்றும் ரோகித் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் என தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, குற்றவாளிகள் சந்திரசேகர் என்ற உஷ் மற்றும் ரோகித் ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண்டைந்தனர்.
இந்தக் கொலைக்கான பின்னணி என்ன? என்பது குறித்து நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ள குற்றவாளிகள் சந்திரசேகர் மற்றும் ரோகித் ஆகியோரை வரும் திங்கட்கிழமை போலீஸ் காவலில் எடுத்த பின்பு தான் முழுமையான தகவல் தெரியவரும். இருப்பினும், கடந்த 2020 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு பகுதியில் கருப்பு என்ற வடிவழகு என்பவரை கொலை செய்த வழக்கில் பைனான்சியர் ஆறுமுகத்துக்கும் தொடர்பு இருப்பதால் பழிக்கு பழி தீர்க்கவே ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், உயிரிழந்த ஆறுமுகம் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி என்பதும் அயனாவரம், டிபி சத்திரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெண் வன்கொடுமை மற்றும் வெடிகுண்டு வழக்கு, அடிதடி வழக்கு என நான்கு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.