தமிழ்நாடு

அடுத்த கட்ட சிகிச்சைக்கு ஆதரவின்றி தவிக்கும் கபடி வீராங்கனை

அடுத்த கட்ட சிகிச்சைக்கு ஆதரவின்றி தவிக்கும் கபடி வீராங்கனை

Rasus

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் இரு கால்களும் செயல் இழந்துள்ள கபடி வீராங்கனை, மருத்துவ வசதியின்றி தவித்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கு 22 வயதாகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு பிளஸ்டூ முடித்த இவர், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கபடி போட்டிகளில் பங்கேற்று பல சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றவர். 2016-ஆம் ஆண்டு ஒரு விபத்தை எதிர்கொண்ட சந்தியாவுக்கு அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. தலையில் ஏற்பட்ட காயத்தில் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சந்தியா, அண்மையில்தான் அதில் இருந்து மீண்டார். ஆனால், இடுப்புக்கு கீழே செயல்திறன் குறைந்து நடக்க முடியாத நிலையில், சந்தியாவின் கனவுகள் கலைந்து போயிருக்கின்றன.

அக்காவின் மருத்துவ செலவுக்கும், குடும்ப வறுமை கருதியும் சந்தியாவின் தம்பி நரேந்திரன் பத்தாவதோடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். சந்தியாவுக்காக 5 லட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில், இதற்கு மேல் அவருக்கு மருத்துவம் பார்க்க வழியின்றி நிற்கிறது அவரது குடும்பம்.

கபடி விளையாட்டில் பல வெற்றிகளை குவித்த சந்தியா, தனது பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில் அடுத்த கட்ட சிகிச்சையும், அவரது எதிர்காலமும் அவரது வறுமையின் முன் கேள்விக்குறியாக நிற்கிறது.