woman dead pt web
தமிழ்நாடு

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்; குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையின்போது நேர்ந்த பரிதாபம்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் கோமதி உயிரிழந்துள்ளதாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB

திருப்பத்தூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்ததை அடுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் அடுத்த காகனாம் பாளையம் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மனைவி கோமதி. இவருக்கு ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இன்று அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது திடீரென அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கோமதியை பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் கோமதி இறந்ததாக கூறி நூற்றுக்கணக்கான உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துனை கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் காவல் துறையினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் உறவினர்களிடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மருத்துவரின் தவறான சிகிச்சையால் கோமதி உயிரிழந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் பட்சத்தில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்வத்தால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.