தமிழ்நாடு

விவசாயிகள் தற்கொலை பொய்யா? ஸ்டாலின்

விவசாயிகள் தற்கொலை பொய்யா? ஸ்டாலின்

webteam

வறட்சி நிவாரணம் கேட்டது பொய்யா? விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது பொய்யா? என தமிழக அரசுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், தமிழக அரசு மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கேட்டது பொய்யா? அல்லது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது பொய்யா? விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனக் கூறிவிட்டு மத்திய அரசிடம் வறட்சி நிதி கேட்பதா? விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விட அதை இல்லை என தமிழக அரசு கூறுவது கொடுமை என்று ஸ்டாலின் கூறினார்.

விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று எங்களைச் சந்திக்க வந்தார். அப்போது 25ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முழு அடைப்பு போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அதற்கான அனுமதி இன்னும் வரவில்லை. இப்போது கிடைத்தாலும் உடனே அவரைச் சந்தித்து பேச தயாராக இருக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

மின்வெட்டு பிரச்னை பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டிய ஸ்டாலின், அவர்கள் கட்சிப் பிரச்னையைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ராமனுஜருக்கு மணிமண்டபம் கட்ட முயற்சி எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதேபோல அவர் ஓய்வெடுக்க செல்லும் கொடநாடு பங்களாவில் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்திலும் மர்மம் இருக்கிறது. இதுபற்றி முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே மர்மம் விலகும்’என ஸ்டாலின் தெரிவித்தார்.