அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத்தான் மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தவறு நடந்ததாகக் குறிப்பிடவில்லை என்றும், முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய தணிக்கைக் குழுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைகயத்தில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அப்போது, மின்சாரத் துறை என்பது சேவைத் துறை என்றும், லாபம் ஈட்டும் துறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 7 ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரமும் வழங்கப்பட்டதாகவும் தங்கமணி சுட்டிக்காட்டினார்.
மின் உற்பத்திக்கான நிலக்கரி, ரயில் வாடகை உள்ளிட்டவை உயர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், சிஏஜி அறிக்கையில் தவறு நடந்ததாகக் குறிப்பிடப்படவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.