தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
செய்தியாளர் - சுப்ரமணியம்
_________
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி அம்மன் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (55) - காந்திமதி (46) தம்பதியர். இவர்களது மகன் கார்த்திக் அசாம் மாநில விமான படையில் பைலட்டாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிக்கோயில் பிரிவு ஆகிய இடங்களில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்த ஈஸ்வரன், வழக்கம் போல் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார்.
அதன்பின் காலை வழக்கம் போல் கார்த்திக் தன் பெற்றோரின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இருவரும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த கார்த்திக், இதுகுறித்து அருகில் உள்ள தனது சித்தி பாக்கியலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த பாக்கியலட்சுமியும், பாட்டி பர்வதமும், நீண்ட நேரம் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். கதவு திறக்கப்படாத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கட்டிலில் காந்திமதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையிலும் அருகில் ஈஸ்வரன் தற்கொலை செய்த நிலையிலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கவுந்தப்பாடி போலீசார், இரு சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட ஈஸ்வரன் எதற்காக மனைவியை கொலை செய்தார், தற்கொலை செய்து கொண்ட ஈஸ்வரன் ஜன்னலில் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.