eps, udhayanidhi pt web
தமிழ்நாடு

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு: ‘போட்டி மாநாடில்லை இது; பொறாமை மாநாடு’- சாடிய இபிஎஸ்!

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பூத் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Angeshwar G

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கொடநாடு கொலை வழக்கு குறித்த ஓபிஎஸ் கருத்து பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், “கார் ஓட்டுநர் கனகராஜ், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநரா என்று ஒபிஎஸ் சொல்லட்டும் பார்க்கலாம். அதிமுகவின் எழுச்சி மாநாட்டை பார்த்து விரக்தியின் விளிம்பிற்கு சென்றதால் தேவையற்ற விமர்சனங்களை ஓபிஎஸ் கூறி வருகிறார். மாநாட்டை அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதி விமர்சனம் செய்துள்ளார். அவர் மாநாட்டை நேரில் பார்த்திருக்க வேண்டும், அப்போது தான் அவருக்கு தெரிந்திருக்கும். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர்களை கொண்டு அதிமுக மாநாடு எழுச்சியோடு நடத்தப்பட்டது.

admk

பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி, பாசறை குழு, மகளிர் குழு என அஸ்திவாரம் அமைத்த பிறகு தேர்தல் பரப்புரையை தொடங்குவோம். சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடத்துவதாக அறிவித்தது போட்டி மாநாடு அல்ல, பொறாமையில் நடத்தக்கூடிய மாநாடு. மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்கு காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை, ஆனால், சேலத்தில் அவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு எப்படி பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்பதை பார்போம்.

தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட போகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மற்றும் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்வதால் குடிநீர் தட்டுப்பாடு என்ற புதிய பிரச்சனை எழும் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் மட்டும் போதாது, சாகுபடி முடியும் வரை முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி , மு.க ஸ்டாலின்

திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு படு பாதாளத்துக்கு சென்று விட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று பல குற்றச்சாட்டுகளைக் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஊழல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தபடும் என்றும் தெரிவித்தார்.