திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கியதில் புளியில் பல்லி இருந்ததாக நந்தன் என்பவர் கடைக்காரரிடம் கேட்டபோது முறையான தகவல் கிடைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அவர் அவதூறு பரப்பியதாக ரேஷன் கடை ஊழியர் கொடுத்த புகாரின் மீது நந்தன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விஷயத்தில், நந்தன் மீது அளிக்கப்பட்ட புகாரால் அவரது மகன் குப்புசாமி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட நந்தனின் மகன் குப்புசாமி நேற்றைய தினம் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றிருந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத்தொடர்ந்து அதிமுக தரப்பிலிருந்து நேற்றைய தினம் மறியல் செய்யப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தின்போது, பொங்கல் தொகுப்பு பல்லி இருப்பதாக புகார் செய்த தந்தை மீது போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த அவரது மகன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அரசின் அலட்சியத்தால், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறி அக்கட்சியின் அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் திருத்தணி பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
இதில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னிலையில் 200க்கும் மேற்ப்பட்ட அதிமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், பொய் வழக்கு வாபஸ் வாங்க வலியுறுத்தியும், பல்லி இறந்த பரிசு பொருட்கள் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பினர்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சாலைமறியல் நீடித்தால் நகரில் அனைத்து பதில் போக்குவரத்து ஸ்தம்பித்தது போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் அதிமுகவினர் சாலை மறியலை கைவிட்ட நிலையில் திருத்தணி கோட்டாட்சியர் சத்யா பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் இருப்பினும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில், ‘புகார் மீதான தவறான அனுகுமுறையே குப்புசாமியின் மரணத்துக்கு காரணம்’ என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருக்கும் தகவலில் “பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுக ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது! இது தற்கொலை அல்ல, ஜனநாயக படுகொலை!” எனக்குறிப்பிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.
தொடர்புடைய செய்தி: திருத்தணி: பொங்கல் தொகுப்பில் பல்லி இறந்து கிடந்ததாக முறையிட்டவர் மீது வழக்குப்பதிவு