அழிந்து வரும் நாட்டு நாய் இனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐடி பொறியாளரின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
நாய்கள் வளர்ப்பில் பலர் ஆர்வம் கொண்டிருந்தாலும் நமது தமிழ்நாடு இன நாய்களுக்கு என்றே மிகப் பிரம்மாண்டமான பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார் ஐடி பொறியாளரான சதீஷ்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நாய் பண்ணை அமைத்து அதில், நமது நாட்டு இன நாய்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாறை, கோம்பை, ராமநாதபுரம், மந்தை போன்ற நாய்களை மட்டுமே வளர்த்து பாதுகாத்து வருகிறார் அவருடைய மனைவி நாகஜோதி மற்றும் பிள்ளைகளும் அவருடன் சேர்ந்து நாய்களை கவனிக்கின்றனர்.
சதீஷின் தந்தை போலீசாக இருந்ததால் அவரது வீட்டில் ராஜபாளையம் நாயை வளர்த்து வந்தார். காலப்போக்கில் நமது நாட்டு நாய் இனங்கள் அழிந்து வருவதை கண்ட சதீஷ், நமது நாட்டு நாய்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு இன நாய்களை வளர்க்க ஆரம்பித்துள்ளர். முதலில் விளையாட்டாக ஆரம்பித்து தற்போது ஒரிஜினல் நாட்டு நாய்களை மக்களுக்கு கொடுத்து நாட்டு நாய் இனங்களை மீட்டெடுத்து வருகிறார்.
நாய் பண்ணை வைப்பதற்கு செலவு அதிகமாகிறது. அதனால், மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை வைக்க வங்கி நிதி உதவி செய்வதுபோல் நாய் பண்ணைக்கு நிதி உதவி கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றவர், ஒரு வேலையில் இருந்துகொண்டு தான் இது போன்ற நாய் பண்ணையை பராமரிக்க முடியும் என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது 6 வகை இந்திய நாட்டு நாய் இனங்கள் பற்றி கூறியிருந்தார். அதில், நான்கு வகை நாய் இனங்கள் ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை ஆகியவை தமிழ்நாட்டு இனத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.