நீலகிரியில் ஆடுகளை வனத்திற்கு அருகில் மேய்த்துக்கொண்டிருந்தவர் அப்பகுதியில் இருந்த யானை ஒன்று தூக்கி வீசியதில் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் கோத்தகிரி கண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலன் (66). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வனத்திற்கு அருகில் நேற்று மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த யானை ஒன்று பாலனை தூக்கி வீசியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று இரவு முழுவதும் பாலன் வீட்டிற்கு வராததால், இன்று பாலனை காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தனர்.
அப்போது அவர் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பாலன் உயிரிழந்ததையடுத்து, ஊரோரம் திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.