தமிழ்நாடு

நீர் திறப்பு குறைந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு

நீர் திறப்பு குறைந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு

webteam

முல்லைப்பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை நீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கன மழையால், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனால் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி வரை உயர்ந்தது. இதனால் தமிழக பாசனம் மற்றும் குடிநீருக்கான நீர் திறப்பு விநாடிக்கு 1,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு கடந்த ஆண்டின் அதிகபட்ச மின் உற்பத்தியாக தினசரி 144 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்தது. 

பின், மழை குறைந்ததால் நீர்திறப்பும் குறைந்து மின் உற்பத்தியும் குறைந்து வந்தது. கடந்த டிசம்பர் 27ம் தேதி மின் உற்பத்தி 126 மெகாவாட்டில் இருந்து 63 மெகாவாட்டாக குறைந்தது. பின், ஜனவரி 3ம் தேதி 46 மெகாவாட்டானது. தற்போது நீர்வரத்து குறைந்து அணை நீர்மட்டமும் 115 அடிக்கும் கீழே இறங்கி வருவதால் தமிழக பாசனம் மற்றும் குடிநீருக்கான நீர் திறப்பு, விநாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி 46 மெகாவாட்டில் இருந்து 23 மெகாவாட்டாக குறைந்துள்ளது. 

அணை நீர்மட்டம் குறைந்து வரும் சூழலில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நீர்திறப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும், விநாடிக்கு 250 கன அடிக்கும் கீழ் நீர் திறப்பு குறைக்கப்பட்டால் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும் எனவும் தமிழக மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.