தமிழ்நாடு

“மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கமல்ல” - எடப்பாடி பழனிசாமி

“மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கமல்ல” - எடப்பாடி பழனிசாமி

webteam

மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கமல்ல எனவும் நோயை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மொத்தம் 38 கொரோனா மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது. மத்திய அரசிடமிருந்து முதற்கட்டமாக ரூ. 500 கோடி வந்துள்ளது.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை செய்யப்படும். கொரோனாவின் தாக்கம் குறைய தனிமைப்படுத்துவது ஒன்றே தீர்வு. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. ரேபிட் டெஸ்ட் கருவிகள் 9ஆம் தேதி வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை செய்யப்படும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா நோயை ஒழிக்க முடியும்.

அரசு ஒரு உத்தரவு போடுகிறது என்றால் அது பொது மக்களின் நன்மைக்காகவே. மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சட்டத்தை அரசு பிறப்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது. சென்னையிலும் நடமாடும் காய்கறி கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உயிரும் முக்கியம். ஒருவர் நோய் தொற்றினால் பாதிக்கப்படும்போது அவரால் அவரது குடும்பம் மற்றும் சமூகம் நோய் தொற்றுக்கு உள்ளாகிறது. பின்னர் அது தடுக்க முடியாத நோய் பரவலாக மாறுகிறது. அதனால் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மாநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது அவரது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது.

தமிழகத்தில் சுமார் 10,000 பேரின் கண்காணிப்பு காலம் முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. பல்வேறு தொழிலாளர் நலவாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. காவல் துறையினரின் கஷ்டத்தை மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளித் தேர்வுகள் குறித்து ஆலோசிக்க முடியும். மக்கள் தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு தேவையான பொருட்கள் வீட்டிற்கே வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்தார்.