கடலூரில் வேறு ஒருவருக்காக ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக எழுந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 8ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். ஆக்சிஜனை மருத்துவர் அகற்றியதால் மூச்சு திணறி கணவர் உயிருக்கு போராடியதாகவும், காப்பாற்றக் கோரி மருத்துவரை அழைத்தும் யாரும் கவனிக்கவில்லை என்றும் உயிரிழந்த ராஜாவின் மனைவி கஸ்தூரி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர் ரமேஷிடம் கூறியபோது, உணவு கொடுக்கும்போது நோயாளிகளுக்கு சிறிது நேரம் ஆக்சிஜன் குழாய் எடுக்கப்படும் என்றும், அந்த சமயத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
தொடர்ந்து ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்றது. மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், உணவு அளிக்கும்போது நோயாளியின் ஆக்சிஜன் இயந்திரம் புதிதாக மாற்றப்பட்டதாகவும், ஆக்சிஜன் இன்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான குற்றச்சாட்டு எனவும் விளக்கம் அளித்தார்.
உயிரிழந்த நோயாளியின் மனைவி கதறி அழுததை கண்டு நெஞ்சு பதைப்பதைப்பதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.