தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கால் தனித் தீவான‌ கிராமங்கள்

வெள்ளப்பெருக்கால் தனித் தீவான‌ கிராமங்கள்

webteam

கஜா புயல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் தனித்தீவாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மன்னவனூர், கும்பூர், கவுஞ்சி மற்றும் பூண்டி கிராமங்களில் தோட்டங்களில் மேய்ந்து கொண்டிருந்த பத்திற்கு மேற்பட்ட மாடுகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் இல்லாததால், பல இடங்களில் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம் எனவும், தகவல் அளிக்க முடியாமல் பல கிராமங்கள் தனித்தீவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகாரிகள் மேல்மலைப்பகுதிகளுக்கு வந்து ஆய்வு செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வட்டாட்சியர் ரமேஷிடம் கேட்டதற்கு, மேல்மலைப்பகுதிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை மலைச்சாலையில் ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் சாலைகளின் நடுவே சாய்ந்துள்ளதால் ஆடலூர் , பன்றிமலையை சேர்ந்த பொதுமக்கள் வெளி ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வனத்துறை அதிகாரிகள், வருவாயத்துறை அதிகாரிகள் மலைச்சாலையில் விழுந்துள்ள மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். விரைவில் மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.