சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் பிற்பகலில் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் கனமழையால் நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரியின் நீர் மட்டம் 21 புள்ளி 20 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 19 புள்ளி 30 அடியாக உள்ளது. காலை நிலவரப்படி ஏரிக்கு சுமார் ஆயிரத்து 400 கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்தூர் கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் பகுதி மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் பூண்டி ஏரியில் 34.23 அடியில் தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், வினாடிக்கு 4 ஆயிரத்து 50 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கொற்றலை ஆற்றில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு, 4 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எரையூர், பீமந்தோப்பு, மணலி, எண்ணூர் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபர்நீர் செல்லும் பகுதிகளான நத்தம், குன்றத்தூர், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், பூந்தண்டலம், எருமையூர், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.