வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஓட்டுநர் உரிமம் இருப்பவர்கள் மட்டுமே வாகனத்தை வாங்க முடியும் என்ற விதியும் நாளை அமலுக்கு வருகிறது.
அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த வாரம் அறிவித்தார். அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், நாளை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. அதோடு, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்தான் இனி வாகனம் வாங்க முடியும் என்ற விதியும் அமலுக்கு வருகிறது. பழகுநர் உரிமம் வைத்திருந்தாலும் வாகனம் வாங்க அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.