ஆறுமுகாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் இடைச்செருகல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவ ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜன் ஆஜரானார். அவரிடம் அப்போலோ மருத்துவமனை தரப்பில் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், அப்போலோ சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5 வரை, நாள் வாரியாகவும், தேதி வாரியாகவும் முறையாக பராமரிக்கப்படவில்லை என கோவிந்தராஜன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு இடைசெருகல்கள் இருப்பதாக குறிப்பிட்டு ஆணையம் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முறையாக ஆவணங்கள் பாராமரிக்கப்பட்டனவா அல்லது அவசரகதியில் தயாரிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.