மதுரையில் தண்ணீர் குடிக்க முயன்று பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கித் தவித்த தெரு நாயை விலங்கு நல ஆர்வலர் உதவியுடன் பொதுமக்கள் மீட்டனர்.
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக தெருநாய்கள் அடித்துக் கொல்லப்பட்டும், விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிளாஸ்டிக் குடத்திற்கும் தலை மாட்டிய நிலையில் உயிருக்கு போராடிய தெருநாயை விலங்கு நல ஆர்வலர் உதவியுடன் பொதுமக்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரையில் ஆரப்பாளையம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்கள் வீட்டு வாசலில் வைக்கப்படும் தண்ணீர் குடங்களில் உள்ள தண்ணீரை குடிக்க முயன்று தலைப்பகுதி குடத்தின் உள்ளே மாட்டிக்கொள்ளும் சம்பவம் சில சமயங்களில் நடப்பது உண்டு. நேற்று ஆரப்பாளையம் பகுதியில் நாய் ஒன்றின் தலை குடத்திற்குள் மாட்டிக்கொண்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடத்தை பாதியாக அறுத்து மீட்க முயன்றனர்.
ஆனால், குடத்தின் வாயில் பகுதியில் நாயின் கழுத்துப்பகுதி சிக்கியதால் நாய் அவதிப்பட்டு அங்கும், இங்கும் ஓடியுள்ளது. இந்த நிலையில் விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த விலங்கு நல ஆர்வலர்கள், நாய் வலையை பயன்படுத்தி நாயை பிடித்து, உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கழுத்தை ,நெருக்கிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் குடத்தின் வாயில் பகுதியை அகற்றினர். இதனைத்தொடர்ந்து நாய் துள்ளிக்குதித்துச் சென்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.