ஆவடியில் பாம்புடன் சண்டையிட்ட நாய்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை ஆவடி: எஜமானை காப்பாற்ற உயிரைவிட்ட நாய்.. பாம்புடன் போராடியபோது நேர்ந்த சோகம்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன், தன்னுடைய உயிரை பணயம் வைத்து சண்டையிட்டுள்ளது ஒரு நாய். அதில் எஜமானரை காப்பாற்றிய நாய் துடித்துடித்து உயிரிழந்த சோகம் குடும்பத்தாரை கண்கலங்க வைத்துள்ளது.

PT WEB

சென்னை அடுத்த ஆவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் மதிவாணன் - நந்தினி தம்பதி. இவர்கள், தங்களது வீட்டில் பாசமாக இரண்டு நாய்களை வளர்த்து வந்தனர். அவற்றுக்கு மேக், டாம் என செல்லப் பெயரிட்டும் அழைத்து வந்தனர். இரண்டு நாய்களும் வெளியாட்கள் வீட்டில் நுழைய முடியாத அளவுக்கு கில்லாடியாக இருந்துள்ளன. வழக்கம் போல மதிவாணன் வேலைக்கு சென்ற நிலையில், மனைவி நந்தினி வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது இவரது வீட்டில் நாய் வழக்கத்துக்கு மாறாக அதிக சத்தத்துடன் குறைத்துக் கொண்டு வீட்டை சுற்றி அங்கும் இங்குமாக ஓடியுள்ளது. இதை கவனித்த நந்தினி வெளியே வந்து பார்த்தபோது, நாய்கள் வீட்டின் பின்புறத்தில் சென்று, நந்தினியை அந்த இடத்திற்கு செல்ல விடாமல் தடுத்துள்ளன.

என்ன பிரச்சனை என்று பார்த்ததில் ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பு வீட்டில் புகுந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக நந்தினியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த நாய்கள் பாம்புடன் சண்டைபோட்டுள்ளன.

நாய்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று வனத்துறை அதிகாரிகளை போன் செய்து அழைத்துள்ளார் நந்தினி. தொடர்ந்து, பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், இரு நாய்களும் பாம்புடன் அரை மணி நேரமாக போராடி அதனை கடித்து குதறின. அப்போது, பாம்பு கொத்தியதில், மேக் என்ற நாய்க்கு விஷம் ஏறி வாயில் நுரைதள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை பார்த்த மற்றொரு நாய் டாம், கண்ணீர் சிந்தியபடி அருகிலேயே சோகத்தில் அமர்ந்துகொண்டது.

தன் உயிரை பணயம் வைத்து எஜமானை காப்பாற்றிய அந்த நாயின் நன்றியுணர்வு அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் நாயின் உயிர் பிரிந்தது, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாம்பை பிடித்து வனத்துறையினர் காட்டுக்குள் விட்ட நிலையில், நன்றியுணர்வால் உயிர் நீத்த நாயின் செயல் குடும்பத்தாரை கண்கலங்க வைத்துள்ளது.