தமிழ்நாடு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

webteam

அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புற்று நோய்க்காக சிகிச்சை அளித்து வரும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதே இந்த எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

அதேபோல மாதத்திற்கு இந்த மருத்துவமனைக்கு 40லிருந்து 50 லட்ச ரூபாய் நன்கொடை வரப்பெறும் என்றும் ஆனால் கொரானா தொற்று ஏற்பட்டதால் நன்கொடை அளிப்பவர்கள் முதலமைச்சர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு பணத்தை நன்கொடையாக வழங்கி வருவதால் தங்களுக்கு வரவேண்டிய நன்கொடை குறைந்துவிட்டதாக மருத்துவமனையின் தலைவர் சாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், “புற்று நோய்க்கு முக்கிய சிகிச்சையான கீமோதெரபிக்காக அருகில் உள்ள மாநிலங்கள் உட்பட பல்வேறு  மாநில மக்கள் இங்கு வருகின்றனர். மருந்துக்கு மட்டுமே மாதத்திற்கு இரண்டு கோடி ரூபாய் செலவாகிறது. கொரோனா காரணமாக வழக்கமாக வரக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது” என சாந்தா தெரிவித்துள்ளார்