அரசுப் பேருந்துகளில் தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் திரைமறைவு கட்டண உயர்வு. சாமான்ய மக்களை திடுக்கிட வைத்திருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு கழகப் பேருந்துகளில் தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் திரைமறைவு கட்டண உயர்வு. சாமான்ய மக்களை திடுக்கிட வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்டண உயர்வுகுறித்து நேரடியாக அறிவிப்பு செய்யாமல், ஏற்கனவே இருக்கின்ற சாதாரணப் பேருந்துகளை விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றி மக்களிடம் வழிப்பறி செய்வதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், 3 ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம், விரைவு கட்டண பேருந்து என்ற பெயரில் ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் விலை உயர்வு ஒருபுறமிக்க, மாநில அரசு தனியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தி, அடித்தட்டு மக்களை மேலும் வாட்டி வதைப்பது கொடுமையானது என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். விரைவுப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ள 766 சென்னை மாநகரப் பேருந்துகளை, உடனடியாக சாதாரணப் பேருந்துகளாக மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் இல்லையெனில், திமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.