தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? என திமுக தலைவர் ஸ்டாலின் தெலங்கானாவைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா அச்சம் காரணமாக நடத்தப்படாமல் இருக்கிறது. தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம் இருப்பதால் இப்போதைக்கு தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின்,
''3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே 10ம் வகுப்பு தேர்வு இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலங்கானா காட்டும் வழியையாவது தமிழக முதலமைச்சர் பின்பற்ற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.