தமிழ்நாடு

கல்விக்கடன்: ``கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது திமுக-வின் தேர்தல் அறிக்கை" -ஆர் பி உதயகுமார்

கல்விக்கடன்: ``கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது திமுக-வின் தேர்தல் அறிக்கை" -ஆர் பி உதயகுமார்

webteam

மாணவர் கல்விக் கடன் ரத்து என்ற திமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது என்றும், அதிமுகவின் கோரிக்கையை ஏற்று திமுக அரசு மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய முன்வருமா என்றும் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவின் `மாணவர்களின் கல்விக்கடன் ரத்து’ என்ற தேர்தல் அறிக்கை குறித்து பேசியிருக்கும் ஆர்.பி உதயகுமார், அதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் பேசுகையில், “திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை கொடுத்தனர். அதில் `மாணவர்கள் வாங்கிய கடன் ரத்து’ என்பதை முக்கியமான ஒன்றாக அறிவித்தார்கள். அதன்படி ‘ஓர் ஆண்டில் கல்வி கடனை கட்ட முடியாமல் இருக்கும், 30 வயதுகுள்ளான இளைஞர்களின் கல்வி கடனை அரசே ஏற்கும்’ என்று திமுக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

தமிழகத்தில் 6,74,066 மாணவர்கள் 17,193 கோடி அளவில் கல்வி கடனை வாங்கி உள்ளார்கள். இந்த 18 மாத ஆட்சியில் 30 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வாங்கிய கடன் குறித்து அரசு விபரம் தெரிவிக்கப்படவில்லை. அது ரத்து செய்யப்பட்டதா, எத்தனை நபர்களுக்கு கடன் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற எந்த விவரமும் வெளிப்படையாக அரசு அறிவிக்கவில்லை.

அதேபோல் திமுக தேர்தல் அறிவிப்பில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார்கள். மேலும் அரசு துறையில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்தார்கள். புதிதாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தாகள். வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும் திமுக வாக்குறுதி கொடுத்தனர்.

ஆனால் இன்றைக்கு வாக்களித்த பின் காத்துகொண்டுள்ள இளைஞர்களுக்கு ஏமாற்றமே பரிசாக வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு, இன்றைக்கு அவர்களை நம்பியிருந்த இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. நடுத்தெருவில் நிற்கும் அந்த இளைஞர்களுக்கு, பாதுகாப்பு வழங்க முன்வருமா இந்த அரசு என்பது எல்லோர் மனதில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு 1,50,533 இடங்கள் உள்ளது. இவற்றை நிரப்புவதற்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சேர்க்கை தொடங்கப்பட்டு முடிவுர உள்ள நிலையில், இதுவரை 95,032 இடங்கள்தான் நிரம்பியுள்ளன. நடப்பாண்டில் பொறியியல் கல்லூரியில் சுமார் 50,000 இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது? தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர திமுக அரசின் கல்விக்கடன் ரத்து அறிவிப்பு கிணற்றில் போட்ட கலாக இருப்பதால், கல்வி கடன் பெற முடியுமா - பெற முடியாதா, வங்கிகள் கடன் தர முன் வருவார்களா என்ற குழப்ப சூழ்நிலை மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

திமுக அரசு இளைஞர்கள் வாழ்வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்னாகும் என்ற அச்சம் நாட்டு மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் கல்வி கடன்உடனடியாக ரத்து செய்வதற்கு இந்த அரசு முன்வருமா என்று `மாணவர்களால் ஆல்பாஸ் முதல்வர்’ என்று பாராட்டு பெற்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை அரசு செயல்படுத்த முன்வருமா செயல்படுத்துமா?” என்றார்.