தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக சார்பில் ரூ.1 லட்சம் மருத்துவ உதவி வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி வந்தவர் நெல் ஜெயராமன். இவர் யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர்.ஆண்டுக்கொருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
அப்படி நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி வந்தார். அந்த நெல்விதைகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்ப பெற்று அதனை மீண்டும் புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தி சாதனை செய்தார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரை நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி போன்றவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சமீபத்தில் ரூ.5லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமனை ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஜெயராமன் உடல்நலம் பெற விழைவதாக ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் மருத்துவ சிகிச்சை உதவிடும் வகையில் திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நெல் ஜெயராமனிடம் ஸ்டாலின் வழங்கினார். அப்போது திமுக முதன்மைச் செயலாளர் டிஆர் பாலு மற்றும் மருத்துவர் எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.