தமிழ்நாடு

பாஜகவின் அடையாளத்தை மாற்றும் 'முருகன்' - நன்றி கூறிய முரசொலி

பாஜகவின் அடையாளத்தை மாற்றும் 'முருகன்' - நன்றி கூறிய முரசொலி

jagadeesh

தமிழக பாஜக தலைவர் முருகன், அக்கட்சியின் அடையாளத்தை மாற்றி வருவதாக திமுக கூறியிருப்பது, அரசியல் அரங்கில் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் திமுகவும் தமிழக பாஜகவும் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், ராமர் இடத்தில் முருகனை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நில மக்களின் வழிபடு தலைவனான முருகனை, ராமரின் இடத்தில் வைத்ததன் மூலம் பாஜகவின் அடையாளத்தை அதன் மாநில தலைவர் மாற்றி வருவதாக முரசொலி குறிப்பிட்டுள்ளது.

வட மாநிலத்தவர் முருகனை வழிபடுவதில்லை என விமர்சித்துள்ள முரசொலி நாளிதழ், அதற்கு ஒரு வழியை எல். முருகன் ஏற்படுத்தியதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை நினைவு கூர்ந்துள்ள முரசொலி நாளிதழ், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் தான் அப்போது கூட்டணியில் திமுக இருந்ததாகவும், பாஜகவோடு முற்றிலும் இரண்டற கலந்துவிட மாட்டோம், கலக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.