சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற வாசகத்துடன் கூடிய முக கவசங்களை அணிந்திருந்தனர்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அரங்கத்துக்கு காலை 9 மணி முதலே எம்.எல்.ஏ.க்கள் வருகை தரத் தொடங்கினர். அப்போது திமுக எம்.எல்.ஏக்கள், 'BAN NEET - ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற வாசகத்துடன் கூடிய முக கவசத்தை அணிந்திருந்தனர்.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
‘நீட்’ தேர்வு மரணங்கள், கூடுதல் மின்சார கட்டண வசூல் விவகாரம், பிரதமர் கிசான் திட்ட முறைகேடு உள்பட பல்வேறு அம்சங்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான விவாதத்துக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகள் 40-க்கும் மேற்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த கூட்டத்தொடரில் மிகுந்த முக்கியமாக கருதப்படுகிறது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் இன்று காலை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.