கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவர் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் 12-ம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகாவை, பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளனர்.
ரேகா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக உறுதியளித்ததாகத் தெரிகிறது. கடந்து ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட ரேகாவை, தனது குழந்தை அழும்போதெல்லாம், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினாவும் சேர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ரேகாவை சிகரெட் கொண்டு ஆண்டோ மதிவாணன் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினரின் மருமகள், ரேகாவின் தலை முடியை வெட்டி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாகச் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார், திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மார்லினா இருவர் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாகப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, "எனக்கும் என்னுடைய மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், சிறுமிக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலுவான கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மார்லினா, “எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது” எனக்கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “ரேகா... உனக்கு எதுவும் வேணும்னா அக்காகிட்ட கேட்டிருக்கலாமே... இப்படி குடும்பத்தையே Damage பண்ணிட்டியே..” என கூறியிருந்தார்.
அதேபோல் ஆண்டோவும் 27 நிமிடங்களுக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டு தங்களை குற்றமற்றவர்கள் என கூறினார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு “இது தொடர்பாக விரிவான அறிக்கையை 2 நாட்களுக்குள் தர வேண்டும்” என காவல்துறை அதிகாரிகளுக்குத் உத்தரவு பிறப்பித்தது.
இளம்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் விசாரணை நடத்த காவல்துறையினர் நேரில் சென்ற போது, திமுக எம்.எல்.ஏ-ன் மகன், மருமகள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் இருவரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன
இந்நிலையில் தாங்கள் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி சென்னை உயர்மன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனடிப்படையில் இருவரும் நீதிமன்றத்திலேயே சரணடையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரையும் கண்டித்து பிப்ரவரி 1-ல் மாவட்டம் தோறும் அதிமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியினர் தற்போது அறிவித்துள்ளனர்.