திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவையொட்டி கட்சிக் கொடிகள் 7 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் க.அன்பழகன் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உற்றத் தோழராகவும், 43 ஆண்டுகள் திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் என குறிப்பிட்டுள்ளார். சமூகநலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்த க.அன்பழகன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சில நாட்கள் உடல் நலிவுற்று இருந்த அவர் மறைவையொட்டி, திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்றுமுதல் ஒருவாரக் காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.