தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பு; திமுக - தேமுதிக கூட்டணி அமையுமா? - விஜய பிரபாகரன் பதில்

மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பு; திமுக - தேமுதிக கூட்டணி அமையுமா? - விஜய பிரபாகரன் பதில்

webteam

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவும் தேமுதிக அதே எழுச்சியோடு உள்ளதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜயபிரபாகரன் பேட்டியளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி விழாவில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும்:

“தேமுதிக இப்போது அதே எழுச்சியோடு செயல்படுகிறதா?”

“வெற்றி தோல்வி என்பது கட்சிக்குள் சகஜம். ஆகவே நிச்சயமாக தேமுதிக அதே எழுச்சியுடன் உள்ளது. கேப்டனுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம்”

“தேர்தல் நேரத்தில் தேமுதிக சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்ற புகார் உள்ளதே... அதை எப்படி பார்க்கின்றீர்கள்?”

“சரியான முடிவு தவறான முடிவு என்று எதுவும் இல்லை. மக்கள் இந்த முறை அங்கீகாரம் கொடுக்காததால் மட்டுமே தோல்வியை தழுவி உள்ளோம். எங்களது வாக்கு சதவீதம் குறையவில்லை என்பதால், விரைவில் எதற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவோம். அடுத்த தேர்தலின்போது, கட்சி அறிவித்தவுடன் தொண்டர்கள் வெற்றியை நோக்கி உழைக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு தொண்டர்களிடம் கேட்கப்பட வேண்டியதாக உள்ளது”

“திமுக-வுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா?”

“அதற்கு, காலம் மட்டுமே பதில் சொல்லும்”

“ஸ்டாலின் ஆட்சி எந்த வகையில் உள்ளது? தேமுதிக அதை எப்படி பார்க்கிறது?”

“தற்போது வரை ஆட்சி சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால் குறைந்த நாட்களைக் கொண்டு ஆட்சியின் தன்மையை கணிக்கவோ சொல்லவோ முடியாது. சிறிது காலம் சென்ற பின்னர் இந்த ஆட்சி பற்றிய தேமுதிக நிலைப்பாட்டை தெரிவிப்போம்”

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது?”

“கேப்டன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இருப்பினும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சிறிது காலம் ஆகும். ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் கேப்டன் வருவாரா என்று பலர் கேட்கின்றனர். கேப்டன் உங்களுக்கு எப்போது தரிசனம் கொடுக்க நினைக்கிறாரோ அப்பொழுது அவர் வருவார். அது எப்போதென அவருக்கு மட்டுமே தெரியும்”