தமிழ்நாடு

விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் - பிரேமலதா விஜயகாந்த்

விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் - பிரேமலதா விஜயகாந்த்

webteam

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் உடல் நலம் தேறி, புதிய உத்வேகத்துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதனிடையே சிகிச்சை முடிந்து பிப்ரவரி 16-ம் தேதி விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அதன்படி இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் விஜயகாந்த். அவருடன் பிரேமலதாவும் உடன் இருந்தார். அமெரிக்காவில் இருந்து நீண்ட பயணம் செய்ததால் விமான நிலையத்திலேயே அவர் ஓய்வு எடுத்தார். ஓய்வுக்கு பின்னர் மதியம் 12.30 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து விஜயகாந்த் வெளியே வந்தார். அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. விஜயகாந்த் நலமாக இருக்கிறார். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. வேறு எந்தக்கட்சியும்  கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. தற்போது தான் விஜயகாந்த் சென்னை திரும்பியுள்ளார். விரைவில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்'' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ''தமிழகத்தின் பெரிய கட்சிகள் எல்லாமே கூட்டணி குறித்து பேசி வருகின்றன. வர இருப்பது நாடாளுமன்ற தேர்தல். இந்தியாவுக்கான தேர்தல். எனவே விஜயகாந்த் என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்'' என்று தெரிவித்தார்.