திட்டமிட்டப்படி பிப்ரவரி மாதம் +2 செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் என்று தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வரவில்லை என்றால், அந்த இடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக பணியாளர்களும், தேர்வுத்துறை ஊழியர்களும் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், பொதுத்தேர்வுகள் பாதிக்கும் சிக்கல் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தேர்வுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார். திட்டமிட்டப்படி பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் +2 செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.