தமிழ்நாடு

‘ஐபிஎல் போட்டியை தடை செய்’: பாரதிராஜா நடுரோட்டில் தர்ணா

‘ஐபிஎல் போட்டியை தடை செய்’: பாரதிராஜா நடுரோட்டில் தர்ணா

webteam

ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் சாலையில் தர்ணா போராட்டம் செய்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், தங்கர் பச்சான், வெற்றிமாறன், ராம், கவுதமன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக் கூடாது எனக் கூறினார். 

அவரைத் தொடர்ந்து பேசிய சத்யராஜ், தமிழர்களின் பிரச்னைக்காக குரல் கொடுப்பது எனது கடமை என்றார். அத்துடன் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், எனவே தமிழிசை செளந்தரராஜன் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமீர், கெளதமன் உள்ளிட்டோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சென்னை எழும்பூரில் திரையுலகினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கெளதமன், ஆரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின் போது ஐபிஎல் போட்டியை தடை செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பட்டு வருகின்றன.