தமிழ்நாடு

ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி : அச்சமடைந்த ஒட்டன்சத்திரம் மக்கள்..!

ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி : அச்சமடைந்த ஒட்டன்சத்திரம் மக்கள்..!

webteam

ஒட்டன்சத்திரம் அருகே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஆட்டோவில் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலை கொல்லப்பட்டி அருகே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோ என்ஜின் பழுது ஏற்பட்டு நின்றது. ஆட்டோவில் வெளிநாட்டினர் இருவர் இருந்ததைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், கொரோனோ தொற்று நோய் பரவும் அச்சத்தில் ஒட்டன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொடைக்கானல் வந்து, அங்கே ஆட்டோ ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கிக் கொண்டு சென்னை சென்றது தெரியவந்தது. அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்தபோது வர முடியாது என்றும், தாங்கள் ஏற்கனவே 6 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி மறுத்து தெரிவித்தனர்.

அதன்பின், வேறு ஒரு ஆட்டோவை வரவழைத்து வெளிநாட்டினரின் ஆட்டோவை கட்டி இழுத்துக்கொண்டு வேடசந்தூர் வழியாக செல்லும்படி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர்களுக்கு முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யாமல் அனுப்பிவைத்துவிட்டதாக, மக்கள் அச்சம் தெரிவித்தனர்.