தமிழ்நாடு

உணவும் ஒழுக்கமும் நல் வாழ்வை தரும்’: கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா

உணவும் ஒழுக்கமும் நல் வாழ்வை தரும்’: கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா

kaleelrahman

கொரோனோ பரிசோதனைக்கு எல்லோரும் அச்சப்படும் நிலையில் நல்ல உணவு உண்டு ஒழுக்கமாக இருந்தால் நலமுடன் வாழலாம் என தஞ்சையை சேர்ந்த 115 வயது மிட்டாய் தாத்தா கூறுகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 4 நாட்களில் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் இதுவரை 31,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகரிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பலரும் வர மறுத்தும், சிலர் ஓடி ஒளிந்தும் கொண்டனர்.

ஆனால், அதே தெருவில் வசிக்கும் மிட்டாய் தாத்தா என்றழைக்கப்படும் 115 வயது நிரம்பிய முகமது அபுகாசிர் பர்மாவில் இருந்து இலங்கைக்கு வந்து தற்போது வரை உடல் நலத்துடன் யாரிடமும் கையேந்தாமல் மிட்டாய் விற்று பிழைத்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே குறைந்த அளவில் மிட்டாய்களை விற்பனை செய்தும் தேங்காய் வியாபாரம் செய்து வரும் இவர் தாமாக முன்வந்து தைரியமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் தாத்தாவை வெகுவாக பாராட்டினர். பரிசோதனைக்கு சென்று ஒவ்வொரு வீடாக அங்கிருந்தவர்களை அழைத்தபோது பலரும் வர மறுத்தனர். பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது தெரியவந்தால், குடும்பத்தினரையே பரிசோதித்து தனிமைப்படுத்தி விடுவீர்கள், எனவே நாங்கள் இப்படியே இருந்துவிடுகிறோம் என கூறி மறுப்பு தெரிவித்தனர். ஆனால் 115 வயது நிரம்பிய மிட்டாய் தாத்தா தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டு எல்லோருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தார். இவருக்கு பரிசோதனை முடிவில் மாற்றமில்லை என வந்துள்ளது.

இது குறித்து கூறும் அவர் சத்தான ஆகாரங்கள் உண்டு குடி பீடி சிகரெட் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தால் தன்னை போல உடல் ஆரோக்கியமுடன் இருக்கலாமென கூறுகிறார் 115 வயது மிட்டாய் தாத்தா.