தமிழ்நாடு

'ஆன்மீக கடமையா? மனித வதையா?' - தி.க. தலைவர் கி.வீரமணி Vs கோவை காமாட்சிபுரி ஆதீனம்

'ஆன்மீக கடமையா? மனித வதையா?' - தி.க. தலைவர் கி.வீரமணி Vs கோவை காமாட்சிபுரி ஆதீனம்

சங்கீதா

தருமபுரம் ஆதினம் பல்லக்கில் செல்ல திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கடவுளாக பாவித்து குருவை பல்லக்கில் அழைத்துச் செல்வர் என கோவை காமாட்சிபுரி ஆதீனம் பதில் தெரிவித்துள்ளார். இருவரும் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்ளார். இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று புகார் எழுந்தது. இதையடுத்து, தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், தருமபுரம் ஆதினம் பல்லக்கில் செல்ல திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கடவுளாக பாவித்து குருவை பல்லக்கில் அழைத்துச் செல்வர் என கோவை காமாட்சிபுரி ஆதீனம் பதில் தெரிவித்துள்ளார். பெரியார் பேச்சைக் கேட்டு காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதியே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றார் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இடையில் கைவிடப்பட்ட பல்லக்கு பழக்கம் மீண்டும் ஏன் என்று எனக் கேள்வி எழுப்பியுள்ள கி.வீரமணி, திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். ரிக்ஷா இழுத்தோர் இப்போது ஆட்டோ ஓட்டுநர்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளுக்கு செய்வது போன்றுதான் ஆதீனத்துக்கும் பூஜை செய்யப்படுகிறது என கோவை காமாட்சிபுரி ஆதீனம் கூறியுள்ளார். காலச்சூழலில் சில ஆதீனங்களில் பல்லக்கு நிறுத்திவைக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் மூத்த ஆதீனம் தருமபுரம் ஆதீனம் என்றும் காமாட்சிபுரி ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மனிதனை மனிதன் சுமப்பது தவறென நாங்களும் கூறுகிறோம் என்று தெரிவித்த அவர், கடவுளாக இருக்கக்கூடிய குருவுக்கு பல்லக்கு தூக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் சுமக்கிறார்கள் எனக்கூறக்கூடாது என்றும், பல்லக்கில் எழுந்தருளுகிறார் என்று சொல்ல வேண்டும் என்வும் காமாட்சிபுரி ஆதீனம் தெரிவித்துள்ளார்.