சுதந்திர தினம் என்றாலே மாணவர்களுக்கு உற்சாகம் கரைபுரளும். விடுமுறை என்பதோடு தேசியக் கொடியை சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்குச் செல்வார்கள். இந்த ஆண்டு சுதந்திர தினம் மாணவர்கள் இல்லாமல் நடந்துமுடிந்துள்ளது.
இந்த நிலையில், குரோம்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏறக்குறைய 70 ஆசிரியர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக 74 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
இதுபற்றி சமூகவலைதளத்தில் எழுதியுள்ள பள்ளி ஆசிரியர் உமா, "முதன் முறையாக குழந்தைகளே இல்லாமல் பள்ளிகள் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டிய சூழல். மேலும், கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பாராட்டி பரிசுகள் வழங்கினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்,
உலகெங்கிலும் பணியாற்றும் மருத்துவர் , செவிலியர், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்கள்.