கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பிற்காகச் சென்ற வேன் கவிழ்ந்ததில், 9 காவலர்கள் காயமடைந்தனர்.
கஜா புயல் தமிழகத்தை கடுமையாக தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டன. மக்கள் வீடுகளின்றி, உணவின்றி, தங்கயிடமின்றி தவித்து வருகின்றனர். வருமானத்திற்கு வழியாக இருந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு வீழ்ந்ததால், விவசாயிகள மனமுடைந்துள்ளனர்.
வீடுகளை இழந்தோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கே உணவுகள் அளிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தஞ்சை மாவட்டம் திருவோணம், பேராவூரணி ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டச் செல்லும் வழியில் ஒரத்தநாடு அருகே துணை முதல்வருக்கு பாதுகாப்பிற்காகச் சென்ற வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் அதிலிருந்த 9 காவலர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், அவர்களை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.