நாளை இரவு (நவம்பர் 20) அல்லது நாளை மறுநாள் (நவம்பர் 21) காலை முதல் டெல்டா மாவட்டங்கள் மழை தொடங்கும் என வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட கடலோரப் பகுதி மீனவர்களின் நம்பகத்தன்மையான வெதர்மென் செல்வகுமார். தினமும் வானிலையை கணித்து மழை, புயல், வெயிலின் அளவீட்டைச் சரியாக சொல்லி டெல்டா மாவட்டங்களில் புகழ்பெற்றவர் செல்வகுமார். கஜா புயலில் தாக்கத்தை ஊர் வாரியாக சரியாக கணித்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை இரவு அல்லது நாளை மறுநாள் காலை முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கனமழை அடுத்த மூன்று நாட்கள் நீடிக்க கூடும். இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் புயல் நிவாரணம், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தடைபடலாம்.
இதனால் மின் விநியோக சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டு பல பகுதிகளுக்கு மின்சாரம் கிடைக்க மேலும் தாமதமாகலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால் கடைகள், வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கலாம்.
ஆகவே தற்போதே அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட மிக அத்தியாவசியமான பொருட்கள் போன்றவற்றை வாங்கி வைத்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மழை பெய்யும் நேரத்தில் தொட்டிகள், பெரிய குவளைகள் உள்ளிட்ட பெரிய பாத்திரங்களில் இயன்ற அளவு மழை நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்ளவும். மின் விநியோகம் விரைவில் சீரமைக்கப்பட்டால் மகிழ்ச்சியே. ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் எல்லாவித சூழல்களையும் சமாளிக்க தயாராக இருப்பது நல்லது என்றும் அவர் முன்னெச்சரிக்கை குறிப்புகளை தெரிவித்துள்ளார்.