தமிழ்நாடு

வேதா இல்லத்தை வாங்குகிறதா அதிமுக? - செல்லூர் ராஜூ பதில்

வேதா இல்லத்தை வாங்குகிறதா அதிமுக? - செல்லூர் ராஜூ பதில்

நிவேதா ஜெகராஜா

“மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா, தீபக் தாமாக முன்வந்து நினைவிடமாக மாற்ற அனுமதி அளித்தால் அவர்கள் வரலாற்றில் நிற்பார்கள்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

மதுரை பெத்தானியபுரத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாமொன்றை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் அதிமுக சார்பாக மேல் முறையீடு செய்வோம். கட்சியின் நிதியை பயன்படுத்தி அந்த இடத்தை வாங்குவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யவேண்டும். ஜெயலலிதா, வாழ்ந்து மறைந்த இடம் அதுதான். அதேபோல அந்த இல்லத்தில் வைத்துதான் அவரை உலகத் தலைவர்கள் அனைவரும், முக்கிய பிரமுகர்கள் பலரும் சந்தித்தனர். எனவே அந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றினால், அங்கு வந்து இல்லத்தைச் சுற்றி பார்க்க இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் சுற்றுலா பயணிகள் வருவர்.

இதை கருத்தில் கொண்டு, ஜெயலலிதா அவர்களின் உறவினர் தீபா - தீபகிற்கு நான் வேண்டுகோளொன்றை வைக்க விரும்புகிறேன். அது, அவர்களாக முன்வந்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்தால், வரலாறு அவர்களைப் பற்றி பேசும். அவர்கள் வரலாற்றில் நிலைத்து இருப்பார்கள். வேதா இல்லம் தவிர, மற்ற இடங்களை இருவரும் பயன்படுத்திக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை” என்றார்.

தொடர்ந்து அவரிடம் மதுரை உயர்நீதிமன்றத்தின் ‘தமிழக முதல்வரை பாராட்டாவிட்டாலும் விமர்சனம் செய்ய வேண்டாம்’ என்று கருத்து குறித்து கேட்டதற்கு, “நீதிபதியின் கருத்துக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், சமீபத்தில் பெய்த பெருமழையால் உணவில்லாமல் துன்பப்பட்ட மக்களை சந்தித்த பின் நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறியிருக்கலாம்” எனக்கூறினார் அவர்.

இதேபோல ‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாக முதல்வருக்கு விமானப்படை பாராட்டு தெரிவித்தது’ குறித்த கேள்விக்கும் "தமிழக முதல்வரை பாராட்டினால் நல்லது தான். ஆனால், அவர் மெத்தனமாகவே செயல்படுகிறார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” எனக்கூறி குற்றம் சாட்டினர்.