தமிழ்நாடு

மக்கள் பயன்படுத்தும் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: விஷம் கலக்கப்பட்டதா என விசாரணை

மக்கள் பயன்படுத்தும் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: விஷம் கலக்கப்பட்டதா என விசாரணை

kaleelrahman

பொறையாறு அருகே கிராமத்தினர் பயன்படுத்தி வந்த குளத்தில்  மீன்கள் செத்துமிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யாரேனும் குளத்தில் விஷம் கலந்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காட்டுச்சேரி கிராமத்தில் பூசைகுளம் அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இக்குளத்து நீரையே பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மூன்று தலைமுறைகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குளத்தை அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளரான தனிநபர் தன்னுடைய குளம் எனக்கூறி ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை தனிநபருக்கும் கிராமக்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து அந்த தனிநபர் கடந்த சில நாட்களுக்கு முன் குளத்தின் கரையோரம் உள்ள மரத்தில் மாந்திரீகம் செய்து ஓர் சிவப்பு துணி முடிப்பை கட்டி வைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை முதல் குளத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்க தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அந்த மீன்களை அப்புறபடுத்தினர். ஆனால் இன்று காலை மீண்டும் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துள்ளது.

மேலும் குளத்தில் தண்ணீர் குடித்த ஆடு ஒன்றும் இறந்துள்ளது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் குளத்தில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்திருக்கலாம் எனவே யாரும் குளத்து நீரை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


குளத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களையும் குளத்து நீரையும் அப்புறப் படுத்திவிட்டு சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளத்தில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், விஷம் கலந்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.