தமிழ்நாடு

உச்சநீதிமன்ற தீர்ப்பு - வாய்ப்புகள் என்ன?

உச்சநீதிமன்ற தீர்ப்பு - வாய்ப்புகள் என்ன?

webteam

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது. தீர்ப்பு எப்படியெல்லாம்‌ அமைய வாய்ப்புள்ளது என்பது பற்றி சட்ட நிபுணர்கள் தரப்பில் கூறப்படும் கருத்துகளை இப்போது பார்க்கலாம்.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதிப்படுத்தப்படலாம். அதன்மூலம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு பேரும் விடுதலை செய்யப்படலாம். கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யலாம். அதன்மூலம், கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதத் தொகையும் உறுதிப்படுத்தப்படலாம்.

கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடலாம். அப்படிச் செய்தால், மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் வரை, நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அமலில் இருக்கும். ஆனால், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதால் வழக்கை சந்திப்பவர்கள் சிறை செல்ல வேண்டியிருக்காது.

ஆனால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு அமலில் இருக்கும் என்பதால், தேர்தலில் போட்டியிட முடியாது. பதவியேற்க முடியாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பை வெளியிட்டால், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்படும். அப்போது மீண்டும் முதலில் இருந்து வழக்கில் விசாரணை தொடங்கும். அதில் தீர்ப்பு வெளியாகும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து அளித்த தீர்ப்பு அமலில் இருக்கும். தேர்தலில் போட்டியிடவோ, பதவிகளை ஏற்கவோ தடை இருக்காது.