சென்னை புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை செய்து வந்த திருடனை போலீசார் கைது செய்தனர்
சென்னை கொளத்தூர் என்விஎம் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்(33). வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
மேலும் மாற்று உடையில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு எதிரில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருட முயற்சிப்பதை போலீசார் கவனித்தனர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பைக்குகளைத் திருடியவர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பதும், வில்லிவாக்கம்,கொரட்டூர், அயனாவரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.
அவ்வாறு திருடும் இருசக்கர வாகனங்களை உருமாற்றி Olx மூலம் விற்பனை செய்து வந்துள்ளார் ரமேஷ். அவரிடம் இருந்து 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த வில்லிவாக்கம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.