தமிழ்நாடு

ராணுவ வீரர்களுடன் இணைந்து சாலையை சீரமைத்த டிஎஸ்பி-க்கு குவியும் பாராட்டு

ராணுவ வீரர்களுடன் இணைந்து சாலையை சீரமைத்த டிஎஸ்பி-க்கு குவியும் பாராட்டு

kaleelrahman

குண்டும் குழியுமாக காட்சியளித்த நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சாலையை போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை வைத்து சீரமைத்த டிஎஸ்பி-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலை மாற்றும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்பட்டது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதோடு சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதையடுத்து சாலையை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் ஆனாலும் சீரமைப்பு பணிகள் செய்யப்படாமல் கிடப்பிலேயே இருந்தது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெய்த கன மழையால் நெடுஞ்சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு தினந்தோறும் நிகழும் சாலை விபத்துக்களால் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவட்டார் காவல் நிலையங்களில் விபத்து வழக்குகள் பதிவாகி வந்தன.

இதையடுத்து தக்கலை டிஎஸ்பி கணேசன், 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் விடுப்பில் இருக்கும் ஜவான்ஸ் அமைப்பை சேர்ந்த 50-ராணுவ வீரர்களை இணைத்து எர்த் மூவர்ஸ் சங்கம் சார்பில் 12 மினி லாரிகளை பெற்று கல்குவாரி கழிவுகளை ஏற்றி வந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தக்கலை முதல் மணலி ஜங்சன் பரைக்கோடு மற்றும் அழகியமண்டபம் ,முளகுமூடு பகுதி வரை சுமார் 5-கிலோ மீட்டர் தூர சாலையை சீரமைத்தனர். டிஎஸ்பி கணேசனின் இந்த சேவையை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.