சபரிமலை விவகாரத்தில், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, ஐப்பசி மாத வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் சென்றனர். ஆனால் அவர்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.
எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் தடியடி நடத்தினர். பதிலுக்கு பக்தர்களும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. போராட்டங்கள் வலுத்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது,
போராடி வருபவர்களுடன் எவ்வித சமரசத்துக்கும் தயார் என தேவசம் போர்டு அறிவித்திருப்பதையும் கேரள அரசு வரவேற்றுள்ளது. அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யத் தயார் என தேவசம் போர்டு அறிவித்துள்ளதை வரவேற்பதாக கேரள அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘ஐய்யப்பன் கோயிலில் பன்னெடுங்காலமாகப் பழக்கப்பட்டுவரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு பெண்பாடு முக்கியமில்லை, பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம். இது மூடநம்பிக்கையல்ல, முடிவான நம்பிக்கை. இது தீர்க்கக் கூடிய நம்பிக்கையல்ல, தீர்க்கமான தீவிரமான நம்பிக்கை' என்று தெரிவித்துள்ளார்.