கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கனகசபைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிரண்ரூபினி. கிரண்ரூபினிக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
ராஜேஷ் உடனான உறவுக்கு, கணவர் சம்பத் இடையூறாக இருந்ததால் கிரண்ரூபினி அவரை கொலை செய்து முடிவெடுத்துள்ளார். அதன்படி கிரண்ரூபினியுடன் இணைந்து ராஜேஷ், கார் ஓட்டுநரான அமீர்பாஷா என்பவர் உதவியுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி கனகசபைநகர் பகுதியில் சம்பத்தைக் காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கிரண்ரூபினி, ராஜேஷ், கார் ஓட்டுநர் அமீர்பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கொலை குறித்த குற்றப்பத்திரிகை, சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. கொலை வழக்கில் ஜாமின் பெற்ற கிரண் ரூபினி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் இவ்வழக்கு விசாரணைக்காக ஒரு சில நாட்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். பின்னர் குற்றவாளிகள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவின் பேரில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடி வந்துள்ளனர்.
குறிப்பாகத் தனிப்படை போலீசார் விழுப்புரம், மங்கலம்பேட்டை, சென்னை, கன்னியாகுமரி, பெங்களூரு போன்ற பல்வேறு இடங்களில் கடந்த 3 மாதங்களாக தங்கி விசாரித்து வந்தனர். விசாரணையில் ராஜேஷ், கிரண்ரூபினி ஆகிய இருவரும் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் கிரண்ரூபினி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிதம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களைச் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.