இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி, சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் அருமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ மத போதகர், இந்து கடவுள்களையும் பிரதமர் மோடியையும் இழிவாகவும், மத்திய உள்துறை அமைச்சர், தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளையும் சுட்டிக்காட்டி அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மதங்களிடையே விரோதத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய 5 தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் அவரை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.