பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட 5 பேர் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறை துறையிடம் இருந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளிகளின் குடும்பத்தார் மற்றும் குற்றவாளிகள் நண்பர்களிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படமெடுத்த வீடாக கூறப்படும் சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரியான கருணாநிதி தலைமையிலான நான்கு பேர் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். வீடியோவில் பதிவாகி உள்ள ஆதாரங்களைக் கொண்டு திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பண்னை வீட்டை சுற்றி வசிக்கும் மக்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருநாவுக்கரசின் பண்னை வீட்டுக்கு காலை வந்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து இதுவரை ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக அழைத்து தனிதனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.