வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் கர்நாடகா மாநில சிறப்பு நீதிமன்றம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நான்கு பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் நான்கு பேரையும் விடுதலை செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் கர்நாடகா சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தவிர மற்ற மூவரும் (சசிகலா, இளவரசி, சுதாகரன்) பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
சிறைச்சாலையில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் சிறைச்சாலை விதிகளை மீறி சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாகவும், சிறைச்சாலையை விட்டு வெளியே சென்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சொகுசு வசதிக்காக இரண்டு கோடி ரூபாய் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது. அந்த புகாரை தொடர்ந்து கர்நாடக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா இளவரசி தரப்பில் யாரும் ஆஜராகாததால் சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் கைது செய்து அக்டோபர் ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.